வேதாளம் சொன்ன மூன்றாம் கதை:
கிளியும் நாகணவாயும் – ஆண்களா? பெண்களா? யார் மோசமானவர்கள்?
விக்ரமாதித்த மன்னன் மீண்டும் அந்த முருங்கை மரத்திற்குச் சென்று, வேதாளம் புகுந்த பிணத்தைத் தூக்கித் தன் தோளில் சுமந்து கொண்டு மௌனமாக நடக்கத் தொடங்கினான்.
அப்போது வேதாளம் பேச ஆரம்பித்தது:
“மன்னா! இந்தப் பாதிராத்திரியில் நீ இப்படி அலைவது உனக்குச் சலிப்பைத் தரும்.
உன் களைப்புத் தெரியாமல் இருக்க ஒரு கதையைச் சொல்கிறேன், கேள்.”
முன்னொரு காலத்தில், பாடலிபுத்திரத்தை விக்கிரமகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.
அவனிடம் விதித சூடாமணி என்ற ஒரு கிளி இருந்தது. அது சாபம் காரணமாகக் கிளியாகப் பிறந்திருந்தாலும், சகல சாத்திரங்களையும் அறிந்த தெய்வீக அறிவு கொண்டது.
மன்னனின் மகன் சந்திரனுக்கும், மாகத நாட்டு இளவரசி சந்திரபிரபாவிற்கும் திருமணம் நடந்தது.
இளவரசியிடம் சோமிகா என்ற ஒரு நாகணவாய் (மைனா) பறவை இருந்தது. அதுவும் கிளியைப் போலவே மிகுந்த அறிவாற்றல் கொண்டது.
இரண்டு பறவைகளும் அரண்மனையில் ஒரே கூண்டில் வளர்ந்து வந்தன.
ஒருநாள் கிளி நாகணவாயைப் பார்த்து, “அன்பே! நாம் இருவரும் இணைந்து மகிழ்வாக வாழ்வோம்” என்று காதலை வெளியிட்டது.
ஆனால் நாகணவாய் அதை மறுத்து, “எனக்கு ஆண்களைப் பிடிக்காது. ஆண்கள் அனைவரும் நன்றிகெட்டவர்கள், துரோகிகள்” என்றது.
அதற்குக் கிளி, “ஆண்கள் கெட்டவர்கள் அல்ல, பெண்கள் தான் வஞ்சகமானவர்கள், கல்நெஞ்சம் கொண்டவர்கள்” என்று வாதிட்டது.
வாக்குவாதம் முற்றியது. இறுதியில், யார் சொல்வது உண்மை என்று இளவரசனிடம் சென்று தீர்ப்பு கேட்க முடிவு செய்தன.
தோற்பவர் மற்றவருக்கு அடிமையாக வேண்டும் என்று பந்தயம் கட்டின.
நாகணவாயின் கதை:
நாகணவாய் ஆண்கள் மோசமானவர்கள் என்ற தன் வாதத்தை மெய்ப்பிக்க ஒரு கதையைச் சொன்னது:
காமந்தகி நகரில் தனதத்தன் என்ற வணிகன் இருந்தான்.
அவன் சூதாட்டத்தாலும் தீய பழக்கங்களாலும் தன் சொத்துக்களை இழந்தான். வறுமைக்கு அஞ்சி வேற்று ஊருக்குச் சென்ற அவன், சந்தனபுரம் என்ற நகரில் ஒரு வணிகனின் மகள் ரத்னாவதியை மணம் முடித்தான்.
மாமனார் வீட்டிலேயே தங்கி சுகமாக வாழ்ந்த அவனுக்கு மீண்டும் பழைய தீய பழக்கங்கள் தலைதூக்கின.
ஒருநாள் தன் மனைவியையும் அவளது நகைகளையும் எடுத்துக்கொண்டு தன் ஊருக்குப் புறப்பட்டான்.
வழியில் ஒரு காட்டில் திருடர்களுக்கு அஞ்சுவது போல நடித்து, மனைவியின் நகைகளைப் பிடுங்கிக்கொண்டான்.
பின், அந்தப் பாவமே அறியாத மனைவியையும் அவளது செவிலித்தாயையும் ஒரு ஆழமான பள்ளத்தில் தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.
செவிலித்தாய் அங்கேயே இறந்தாள். ரத்னாவதி கடும் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்துத் தன் தந்தை வீட்டிற்குச் சென்றாள்.
ஆனால், தன் கணவன் திருடர்களால் கடத்தப்பட்டதாகப் பொய் சொல்லி அவனைப் பாதுகாத்தாள்.
சிறிது காலம் கழித்து, மீண்டும் பணம் பறிக்க வந்த தனதத்தனை அவள் கண்டாள்.
அவனது காலில் விழுந்து தடுத்தவள், பெற்றோரிடம் தான் சொன்ன பொய்யையே அவனிடமும் சொன்னாள்.
ஆனால், அன்றிரவு அந்த நன்றிகெட்ட கணவன், தன்னை நம்பி உறங்கிய மனைவியைக் கொன்றுவிட்டு, அவளது நகைகளுடன் தப்பி ஓடிவிட்டான்.
“மன்னா, இதுதான் ஆண்களின் குரூர குணம்” என்றது நாகணவாய்.
கிளியின் கதை: பெண்களின் வஞ்சகம்
இப்போது கிளி தன் கதையைச் சொல்லத் தொடங்கியது:
ஹர்ஷவதி நகரில் வசுதத்தா என்ற ஒரு வணிகனின் மகள் இருந்தாள்.
அவளுக்குச் சமுத்திரதத்தன் என்ற குணவானுடன் திருமணம் நடந்தது.
ஆனால், வசுதத்தா ஒரு அந்நிய இளைஞன் மீது மோகம் கொண்டு அவனுடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்தாள்.
ஒருநாள் அவளது கணவன் ஊரிலிருந்து திரும்பினான்.
அன்று இரவு அனைவரும் உறங்கிய பிறகு, வசுதத்தா தன் காதலனைச் சந்திக்கச் சென்றாள்.
அப்போது ஒரு திருடன் அவளது நகைகளைத் திருட அவளைப் பின்தொடர்ந்தான்.
ஒரு பூங்காவில் அவளது காதலன் திருடன் என்று கருதப்பட்டுத் தூக்கிலிடப்பட்டுக் கிடந்தான்.
அவன் இறந்துவிட்டதை உணராத வசுதத்தா, பிணமான அவனுக்கு அலங்காரம் செய்து முத்தமிட்டாள்.
அப்போது அந்தப் பிணத்தில் புகுந்திருந்த ஒரு வேதாளம், அவளது மூக்கைக் கடித்துத் துப்பியது.
வலியால் துடித்தவள் அரண்மனைக்கு ஓடிவந்து, “என் கணவன் காரணமே இன்றி என் மூக்கை அறுத்துவிட்டான்” என்று கூச்சலிட்டாள்.
அரசன் சமுத்திரதத்தனுக்கு மரண தண்டனை விதித்தான்.
அப்போது அங்கு வந்த திருடன், உண்மையைச் சொல்லி, “மன்னிக்கவும் மன்னா, அந்தப் பிணத்தின் வாயைத் திறந்து பாருங்கள், மூக்கு அங்கேயே இருக்கும்” என்றான்.
உண்மை வெளிப்பட்டது. வசுதத்தாவின் காதுகளும் அறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டாள். “மன்னா, இதுதான் பெண்களின் வஞ்சகக் குணம்” என்றது கிளி.
கதைகள் முடிந்ததும், கிளியும் நாகணவாயும் தங்கள் சாபம் நீங்கித் தேவர்களாக மாறி சொர்க்கத்திற்குப் பறந்து சென்றன.
அந்த அவையில் அவற்றுக்கான தீர்ப்பு வழங்கப்படவே இல்லை.
வேதாளத்தின் கேள்வி:
கதையை முடித்த வேதாளம் விக்ரமாதித்தனிடம் கேட்டது:
“மன்னா! இப்போது சொல், உண்மையில் யார் மோசமானவர்கள்? ஆண்களா அல்லது பெண்களா?
தெரிந்தும் நீ பதில் சொல்லாவிட்டால் உன் தலை சிதறும்!”
விக்ரமாதித்தன் நிதானமாகப் பதிலளித்தான்:
“வேதாளமே! அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த வணிகனைப் போல மிகச் சில ஆண்கள் மோசமானவர்களாக இருக்கலாம். ஆனால், பெண்களின் இயல்பை ஒப்பிடும்போது, அவர்களே அதிக வஞ்சகம் மிக்கவர்களாகவும், தீயவர்களாகவும் இருக்கிறார்கள் என்று பல வரலாறுகள் கூறுகின்றன.”
சரியான பதிலைக் கேட்டவுடன், வேதாளம் மீண்டும் சிரித்துக்கொண்டு மன்னனின் தோளிலிருந்து மறைந்து மரத்திற்கே ஓடியது.
இந்தப் பதிவைப் படித்தவுடன் விக்கிரமாதித்தன் ஒரு கடைந்தெடுத்த ஆணாதிக்க வாதி என்று தோன்றுகிறதா?
அவன் தேவி உபாசனை செய்துகொண்டு அப்பாவிப் பெண்ணை ஏமாற்றிய ஆணை மோசம் என்று சொல்லாமல் பெண்ணை மோசம் என்று சொல்கிறானே என்று தோன்றுகிறதா?