கொண்டு வந்தேன் கொண்டு வந்தேன்
இத்தனை பூ கொண்டு வந்தேன்
ரோஜாப்பூ கொண்டு வந்தே எங்கள்
ராஜேஸ்வரியே பூஜை செய்தால்
தேசாதி தேசம் மெச்சும் ஒரு
ராஜாப்போல வாழச் செய்வாள்
முல்லைப்பூ கொண்டு வந்தே எங்கள்
மோகனாங்கியை பூஜை செய்தால்
இல்லை என்று சொல்லாமலே அவள்
அள்ளி அள்ளி அளித்திடுவாள்
மரிக்கொழுந்து கொண்டு வந்தே எங்கள்
மனோன்மணியை பூஜை செய்தால்
திருக்கோலம் கொண்டு அங்கே
அவள் தினம்தோறும் வந்திடுவாள்
ஜாதிப்பூ கொண்டு வந்தே எங்கள்
ஜோதி அவளை பூஜை செய்தால்
ஓதி உணரா வித்தையெல்லாம் தந்து
அவள் மேதை என்றாக்கி விடுவாள்
மகிழம்பூ கொண்டு வந்தே எங்கள்
மாதங்கியை பூஜை செய்தால்
மணமாகாத கன்னியர்க்கு திருமணம்
அவள் நடத்தி வைப்பாள்
தாழம்பூ கொண்டு வந்தே எங்கள்
தாட்சாயணியை பூஜை செய்தால்
வாழாப் பெண்ணை நாதனுடன்
அவள் சேர்த்து வைப்பாள்
பத்ரம் பல கொண்டு வந்தே எங்கள்
வாலையை பூஜை செய்தால்
சித்திரை போல உள்ளவர்க்கு
அவள் புத்ர பாக்கியம் செய்திடுவாள்
தாமரைப்பூ கொண்டு வந்தே எங்கள்
ஷியாமளயை பூஜை செய்தால்
தாமதம் செய்யாமலே
அவள் தாலி பிச்சை அளித்திடுவாள்
மல்லிகைப்பூ கொண்டு வந்தே எங்கள்
மகேஸ்வரியை பூஜை செய்தால்
பில்லி சூன்யம் ஏவல் எல்லாம்
அவள் பின்னாலே ஓட செய்வாள்
பவளமல்லி பூ கொண்டு வந்தே எங்கள்
அம்பிகையை பூஜை வெய்தால்
ஜென்மாந்திர பாவமெல்லாம்
அவள் தீர்த்து விலக்கி ஓட்டிடுவாள்
பரிஜாதம் கொண்டு வந்தே எங்கள்
பார்வதியை பூஜை செய்தால்
பால ரூபம் கொண்டு
அவள் நம் பாவமெல்லாம் போக்கிடுவாள
அரளிப்பூ கொண்டு வந்தே எங்கள்
அபிராமியை பூஜை செய்தால்
அளவில்லாத செல்வத்தை
அவள் அகமகிழ தந்திடுவாள்
செம்பரத்தை கொண்டு வந்தே எங்கள்
சண்டிகையை பூஜை செய்தால்
தந்திரமாய் நம் கனவில் வந்து
அவள் அந்தரங்கள் செல்லிடுவாள்
மாதுளம்பூ கொண்டு வந்தே எங்கள்
காளியை பூஜை செய்தால்
மங்கள வாழ்வு தந்து
அவள் மனமகிழ செய்திடுவாள்
மருதாணிப்பூ கொண்டு வந்தே எங்கள்
மீனாட்சியை பூஜை செய்தால்
மாறாத மனத்துடன் பக்தி பாடல்கள்
அவள் பாடச் செய்வாள்
பத்திரிப்பூ கொண்டு வந்தே எங்கள்
திரெளபதியை பூஜை செய்தால்
கூர்ந்து நம் முள்ளே
அவள் அனுக்ரஹம் செய்திடுவாள்
நீலாம்பரம் கொண்டு வந்தே எங்கள்
நீலாயதாட்சியை பூஜை செய்தால்
நித்யானந்தம் கொண்டு உலகில்
அவள் நித்யவாசம் செய்திடுவாள்
மனோரஞ்சிதம் கொண்டு வந்தே எங்கள்
மாலினியை பூஜை செய்தால்
சுகமான ஸுகந்தமுடன்
அவள் மனம் போல வீசச் செய்வாள்
சம்பங்கிப்பூ கொண்டு வந்தே எங்கள்
சர்வேஸ்வரியை பூஜை செய்தால்
சகல சௌபாக்கியம் தந்து
அவள் சஞ்சலத்தை நீக்கிடுவாள்
சாமந்திப்பூ கொண்டு வந்தே எங்கள்
சங்கரியை பூஜை செய்தால்
சத்தியமாய் வாழ்வினிலே
அவள் சந்தோஷத்தை அளித்திடுவாள்
தும்பைப்பூ கொண்டு வந்தே எங்கள்
துர்கையை பூஜை செய்தால்
தரித்திரத்தை துரத்தி
அவள் தனதான்யம் பொழிந்திடுவாள்
மந்தாரப்பூ கொண்டு வந்தே எங்கள்
லலிதாம்பிகையை பூஜை செய்தால்
பந்த பாசம் ஆசை நீக்கி
அவள் வந்தனங்கள் செய்திடுவாள்
வெட்டி வேர் கொண்டு வந்தே எங்கள்
புவனேஸ்வரியை பூஜை செய்தால்
மட்டில்லாத மகிழ்ச்சியுடன்
அவள் கட்டாயமாய் கிட்டிடுவாள்
கதிர்பச்சை கொண்டு வந்தே எங்கள்
காமாட்சியை பூஜை செய்தால்
கடைக்கண்ணால் கடாட்சித்து ஜன்மம் கடைத்தேற
அவள் செய்திடுவாள்
கொண்டு வந்தேன் கொண்டு வந்தேன்
இத்தனை பூ கொண்டு வந்தேன்
கருமாரி சாம்பல் பெற்றால்
கண்ட பிணி ஓடிவிடும்
இடைஞ்சல்கள் மாறி இன்பம்
இல்லத்தை நாடிவரும்