வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் துவக்கமும் வளர்ச்சியும்.
தோற்றம்
வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆசிரமத்தை 1940 தைப்பூசம் அன்று ஸ்ரீமத் சுவாமி அம்பானந்தஜீ மஹராஜ் அவர்கள் ஸ்தாபித்தார்கள். கேரள மாநிலத்தின் மாவேலிக்கரையில் கண்டியூர் அருகே வாழ்ந்து வந்த மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம் பிள்ளை லெட்சுமி அம்மையார் ஆகியோருக்கு கொல்லம் வருடம் 1049 (கி.பி. 1874) அன்று ஆனி மாதம் 26.ம் நாள் பரணி நட்சத்திரம் அன்று அம்பானந்த சுவாமிகள் பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் மதுர நாயகம் பிள்ளை. பெற்றோர் அழைப்பது சுவாமிக்குட்டி என்று. ஊரார்கள் மதுரம் என அழைத்தனர்.
மதுர நாயகத்திற்கு ஐந்து தம்பியரும், ஒரு தங்கையும் உண்டு. 16.ம் வயதில் தந்தையும் 18.ம் வயதில் தாயும் மறைந்த காரணத்தினால் குடும்ப சுமையை தாங்க வேண்டி வந்தது. தாய்மாமாவின் ஆதரவுடன் திருவனந்தபுரம் சென்று திருவிதாங்கூர் அரசு அறிவியல் கலை கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்து பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சென்று பொறியியல் கல்லூரியில் படித்தார். அவ்வேளையில் 1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அமெரிக்க விஜயம் முடித்து சென்னை வந்திருந்தார். அப்பொழுது அம்பானந்தர் அவரை தரிசித்ததுடன் அவரது சொற்பொழிவுகளையும் கேட்டார்.
சுவாமிஜியின் தலையை சுற்றி ஒரு ஒளி வட்டத்தை அம்பானந்தர் கண்டார். ஒரு நாள் கடற்கரையில் அவரை சந்தித்து பேச முற்பட்ட பொழுது பின்னர் பேசலாம் சென்று படியுங்கள் என கூறி அனுப்பியுள்ளார் சுவாமி விவேகாந்தர், சுவாமி விவேகானந்தரின் சந்திப்பும், சொற்பொழிவும் இவரை கவர்ந்ததால் படிப்பில் கவனமின்றி சுவாமி விவேகானந்தரின் நூற்களையே படித்து வந்தார். இதனால் தேர்வில் தோல்வி அடைந்தார். வீடு திரும்பி இவருக்கு உறவினர்கள் நாய் மாமாவின் மகளை மணம் முடித்து வைத்தனர், மீண்டும் சென்னை சென்று தோல்வி அடைத்த பாடங்களை படித்தார். அவ்வேளை ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடரும் சுவாமி விவேகானந்தரின் சகோதர துறவியுமான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சென்னையில் தங்கி இருந்தார். அவருடைய ஆன்மீக வகுப்புகளில் கலந்து கொண்டு அவர் தம் பிரம்மச்சரிய கருத்துக்களால் கவரப்பட்டார். எனவே தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
1905-ல் மாவேலிக்கரை மாந்தார் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்தார். 1914.ல் ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவி சீடரான ஸ்ரீநிர்மலானந்த சுவாமிகள் இவரை கல்கத்தா அழைத்து சென்றார். அங்கு அன்னை சாரதா தேவியிடம் மந்திர தீட்சை பெற்றார். 1932.ல் ஓய்வு பெற்ற பின் திருவனந்தபுரம், நெட்டயம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். 1935.ல் நிர்மலானந்த சுவாமிகள் துறவற தீட்சை வழங்கி அம்பானந்த சுவாமிகள் என துறவற நாமமும் வழங்கினார்.
1937.ல் ஸ்ரீராமகிருஷ்ண மிஷனில் இருந்து விலகி திருவல்லா முதலிய ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமங்களில் சில காலம் தங்கினார். 1939.ல் கன்னியாகுமரி மாவட்டம் ஆளுரில் ஸ்ரீகிருஷ்ணாசிரமத்தில் தங்கினார். 1940.ல் தைப்பூசம் அன்று வெள்ளிமலையில் ஆசிரமம் அமைத்து தங்கினார்கள். 1942.ல் ஆசிரம வாசிகளான சிவசங்கரன், வேலாயுதம், ஆறுமுகம் ஆகியோருக்கு பிரம்மச்சரிய தீட்சையும் காவி உடையும் வழங்கினார். 1946.ல் மேற்கு நெய்யூர் ஸ்ரீராமகிருஷ்ண சாரதா ஆசிரம தலைவர் பிரம்மச்சாரி கோவிந்தஜி, திருவல்லா ஆசிரமவாசி ஸ்ரீமாதவன் உண்ணித்தான், ஆலப்புழை ஆசிரமவாசி ஸ்ரீராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தறவர நீட்சை வழங்கி முறையே ஸ்ரீராமகிருஷ்ணானந்தர், சுவாமி சாம்பசிவானந்தர், சுவாமி ராதாகிருஷ்ணானந்தர் என்ற துறவற நாமம் வழங்கினார்.
1951ல் வெள்ளிமலை ஆசிரமவாசிகளான இரணியல் சுப்பையா. கள்ளக்குறிச்சி சுப்பையா ஆகிய இருவருக்கும் காவி உடைகளை வழங்கி ஆசீர்வதித்தார். இத்தகைய ஒரு சிறந்த மகான் 1951 மே மாதம் ஆறாம் நாள் பரணி நட்சத்திரத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு கடுக்கரையில் மகா சமாதி அடைந்தார்.
ஆசிரமத் தோற்றம்
கி.பி. 1939.ல் கல்படி சிவசங்கரன் நாயர், இரணியல் பன்றிகோடு ஆறுமுகம் பிள்ளை, மணவாளக்குறிச்சி குமாரதாஸ், தலக்குளம் வேலாயுதம் பிள்ளை ஆகிய நான்கு அன்பர்களும் சுவாமி கிருஷ்ணானந்தர் ஆசிரமத்தில் இருந்த “ஸ்ரீ அம்பானந்த சுவாமிகளை சந்தித்து தாங்கள் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புவதாக கூறினார். இதன்படி “ஸ்ரீ பக்த விவேகானந்த சங்கம்” அமைத்து துறவு வாழ்க்கை வாழ விரும்பினர். வெள்ளிமலை தென்மேற்கு சாரலில் மடம் அமைக்க மேற்கூறிய நால்வரும் முன்வந்தனர். இதற்கு சிவசங்கரன் நாயர் அவர்களே தன்னுடைய | ஏக்கர் 2 சென்ட் நிலத்தை தானமாகவும் தன் சகோதர சகோதரிகளின் 3 ஏக்கர் 6 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கியும் கொடுத்து மடம் கட்டுமாறு கூறினார். 1939,ல் ஸ்ரீமத் அம்பானந்த சுவாமிகளின் பூர்வாசிரம சகோதரர் திரு. சத்யவான் சி. கோலப்பாபிள்ளை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 1940 தைப்பூசம் அன்று தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டு கழித்து குமாரதாஸ் நீங்கலாக ஏனைய மூவருக்கும் பிரம்மச்சரிய தீட்சை வழங்கி முறையே பிரேம சைதன்யா, ஹம்ச சைதன்யா, பக்தி சைதன்யா என தீட்சா நாமம் வழங்கினார். சில மாதங்களில் ஹம்ச சைதன்யா வட இந்தியா யாத்திரை சென்றார். பின்னர் திரும்பி வரவில்லை. 1944ல் பிரேம சைதன்யா என்ற சிவசங்கரன் நாயர் புற்று நோயால் காலமானார் 1943ல் பக்தி சைதன்யா பூர்வாசிரமத்திற்கு திரும்பினார். இவ்வாறு இவர்கள் பிரிந்து சென்ற காலத்தில் தான் இரணியல் சுப்பையா மடத்தில் சேர்ந்தார். ஆறு மாதங்களில் கன்னக்குறிச்சி சுப்பையாவும் ஆசிரமம் வந்தார் 195டல் அம்பானந்தர் இருவருக்கும் காவி உடை வழங்கினார்.
இரணியல் சுப்பையா அவர்கள் பி.ஏ பட்டதாரி. பட்டம் பெற்ற சில நாட்களில் மடத்தில் சேர்ந்து விட்டார். மடத்தில் ஆறு மாத காலம் ஒரு துவக்கப்பள்ளி நடத்தி வந்தார். ஆனால் கல்படியில் அரசு பள்ளி துவங்கியதால் இது நிறுத்தப்பட்டது. 1951ல் ஆகஸ்ட் மாதம் பவுர்ணமி நாளில் அம்பானந்தரின் சகோதரத் துறவிகளான ஸ்ரீமத் நிரஞ்ஞநாநந்த சுவாமிகள்,ஸ்ரீமத் வாஹீஸ்வராநந்த சுவாமிகள் முன்னிலையில் விரஜா ஹோமம் வளர்த்து இரு பிரம்மச்சாரிகள் முறைபடி துறவற தீட்சை பெற்றனர். இரணியல் சுப்பையா ஸ்ரீமத் மதுரானந்தர் எனவும், கன்னக்குறிச்சி சுப்பையா ஸ்ரீமத் சத்யாநந்தர் எனவும் தீட்சா நாமம் பெற்றனர்.
ஸ்ரீமதுரானந்தர் வாழ்க்கையும் பணியும்
புண்ணிய பாரத பூமியின் தென் பகுதியாம் கன்னியாகுமரியில் இரணியல் என்னும் சிற்றூரில் பண்டாரம் பிள்ளைக்கும் லெட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1922.ல் ஏப்ரல் மாதம் 14.ம் நாள் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் சுப்பையா பிள்ளை. சிறு வயதிலேயே பஜனை பூஜை முதலியவைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் சுவாமிகள். வீட்டிற்கு முன்புள்ள பஜனை மடத்திலும் மார்த்தாண்டேஸ்வர ஆலயத்திலும் தினமும் சென்று வழிபட்டு வந்தார்.
தன் பன்னிரெண்டாம் வயதில் புலால் மறுப்பு குறித்து குறட்பாவை ஆசிரியர் கூறக் கேட்ட அவர் அன்று முதல் புலால் உணவை மறுத்தார். எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. தெருவில் யாராவது சன்னியாசிகளை பார்த்தால் அவர்களை உபசரிப்பதை பெரும் பேறாக கருதினார். இவருக்கு பதினெட்டு வயது இருக்கும் போது இரணியலில் ஸ்ரீஅம்பானந்த சுவாமிகளை சந்தித்தார். சுவாமி அம்பானந்தா அவருக்கு அன்னை சாரதா தேவியின் பிரசாதமாக பாத தீர்த்தமும், கற்கண்டும் கொடுத்தார். அவரிடம் பிரியா விடை பெற்று செல்லும் பொழுது குரு நாதரால் ஆட்கொள்ளப்பட்டு உடல் மட்டும் தனியே செல்வது போல் உணர்ந்தார்.
எவ்வாறேனும் ஆசிரமத்தில் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தார். ஆயினும் தாயின் வேண்டுகோளை ஏற்று திருவனந்தபுரம் சென்று பி.ஏ தத்துவ இயல் பட்டத்தை முடித்து விட்டு ஊர் திரும்பினார். கல்லூரி நாட்களில் மகாத்மா காந்திஜியின் கருத்துக்களால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்திலும் சில நாட்கள் ஈடுபட்டார். பட்டதாரி ஆனதால் வேலை வாய்ப்புகள் வீடு தேடி வந்தன. ஆனால் துறவு நாட்டம் கொண்டிருந்த சுவாமிகள் அவற்றை எல்லாம் ஏற்கவில்லை. ஆசிரமத்தில் சேர்ந்து இறை வாழ்வு வாழ துடித்தார். அதற்கான ஒரு வாய்ப்பும் வந்தது. ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட சிறிய பள்ளிக்கு இவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு வரத் தொடங்கிய சுப்பையா பிள்ளை நிலையாக ஆசிரமத்தில் தங்கலானார். இரண்டு ஆண்டுகளில் தாயும், தந்தையும் காலமானார்கள். 1951.ல் அம்பானந்த சுவாமிகள் இவருக்கு காவி உடை வழங்கினார். சில மாதங்களில் அம்பானந்த சுவாமிகள் மகா சமாதி அடைந்தார். எனவே அவருடைய குரு பாயிக்களான சுவாமி வாகீஸ்வரானந்தர் மற்றும் சுவாமி நிரஞ்சனானந்தர் ஆகியோரின் முன்னிலையில் விரஜா ஹோமம் செய்து துறவற தீட்சை ஏற்று ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தர் என்ற துறவற நாமமும் ஏற்றார்.
ஸ்ரீமத் மதராளந்தர் மடத்தின் தலைமை பொறுப்பேற்று நடத்தி வந்தார். 195டல் அன்னை சாரதா தேவியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கல்கத்தா சென்று வந்தார். 1957.ல் சுவாமி அபேதானந்தருடன் திருக்கைலாய தரிசனம் செய்யக்கூடிய வாய்ப்பும் சுவாமிக்கு கிடைத்தது. பின் சத்தியாநந்தர் பொறுப்பில் விட்டு விட்டு 1956 ல் இமயமலை சென்று தவம் செய்து திரும்பினார். பின்னா சிறிது காலம் ஈத்தாமொழி கோம்பை சுவாமி மடத்தில் தங்கினார். 1973ல் மீண்டும் வந்து தலைமை பொறுப்பை ஏற்றார். சுவாமி மதுரானந்தரின் அயராத உழைப்பால் விவேகானந்த மந்திரம் என்ற வெள்ளிமலை ஆஸ்ரமம் ஓங்கி வளர்ந்து உலகுக்கு ஞான ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. சமயக்கல்வி போதிக்க அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் சமய வகுப்பு நடைபெற நடைமுறைப்படுத்தினார். இராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கத்தில் தலைமை செயலாளராகவும், தலைவராகவும் இருந்து ஆன்மீக வெள்ளம் பாய்ச்சினார்.
இமய மலை சென்று பல வருடங்களை தவ வாழ்க்கையில் கழித்தார். ஈத்தாமொழி ஸ்ரீகோம்பை சுவாமிகள் மடத்தில் பணத்தை தொடாமலும் மௌனியாகவும் இருந்து மூன்று ஆண்டுகள் கழித்தார். கன்னியாகுமரி கடலில் பாறை நினைவு சின்னத்தை எழுப்புவதற்கு முதலில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் சேர்ந்து அதற்கென தொண்டாற்றினார். வாய்மை, ஒழுக்கம், அன்பு இவற்றின் திரு உருவமான சுவாமிகள் 1972.ல் இந்துக்களிடையே சமயக் கல்வியை பரப்புவதற்காக சமயவகுப்பை தொடங்கினார். 1981.ல் இந்து சமய இளைஞர் இயக்கமும், 1984.ல் இந்து சமய கல்வி அறக்கட்டளை என்ற ஹிந்து தாம வித்யா பீடமும் நிறுவப்பட்டது.
ஆன்மீக வாழ்க்கை வாழ விரும்பும் பக்தர்களுக்கு ஆன்மீக குருவாக இருந்து வழிகாட்டினார். பத்தொன்பது பேருக்கு துறவற தீட்சையும்.
நூற்றுக்கணக்கானவர்களுக்கு மந்திர தீட்சையும் வழங்கியுள்ளார். ஏழை எளியவர்களுக்கு பொருளுதவியும், பண உதவியும் கல்வி உதவியும் செய்து ஆதரவற்றவர்களுக்கு ஆறுதலாக இருந்து வழி நடத்தினார்.
பெண்களுக்கு பக்தியும், சக்தியும் வளர திருவிளக்கு பூஜை என்னும் வழிகாட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கோயில்கள் இவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும். கோயில்களில் நடக்கும் சமய மாநாடுகளில் பங்கு கொள்வதில் இவருக்கு தீராத தாகம் இருந்தது. எவ்வளவு தூரமானாலும் நடந்தே செல்வார். மாநாடு முடிவதற்கு இரவு எத்தனை மணியானாலும் கவலைப்படமாட்டார். நடந்தே ஆசிரமத்திற்கு செல்வார். சரியான சாப்பாடு தூக்கமின்றி உடல்நலம் கெட்டாலும் பகவானுக்காகத்தானே என்று ஆனந்தப்படுவார்.
1993.ல் ஏற்பட்ட வெள்ள சேதத்தின் போது சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மிஷனிடம் உதவி கோரி கிடைத்த பதினைந்து லட்சம் ரூபாயை கொண்டு எழுபது வீடுகள் கட்டி கொடுத்து உதவினார். 1944.ல் பெண்களுக்காக ஆசிரமத்தை நெட்டாங்கோட்டில் அமைத்தார். 1998.ல் நோயால் தாக்கப்பட்டபொழுதும் மற்றவர்களின் உதவியுடன் சமய மாநாடு போன்றவற்றிற்கு செல்வார். அப்படி இயலாத போது மனம் வருந்துவார். அப்படிப்பட்ட ஒரு ஞான தீபத்தை 1999 ஜூன் 2.ம் நாள் நாம் இழந்து விட்டோம். இப்படிப்பட்ட ஒரு மகா புருஷரை வேறு எங்கும் நாம் காண இயலாது.
பல இளைஞர்கள் மதுரானந்த சுவாமிகளால் கவரப்பட்டு ஆசிரம வாழ்க்கை வாழ துணிந்தனர். குறிப்பாக 1979.ல் திருவனந்தபுரம் திரு, ராஜு என்பவரும் சரக்கல்விளை திரு. ரங்கன் என்பவரும் தக்கலை திரு. ராஜ் என்பவரும் 1981.ல் தக்கலை திரு, வேலுதாஸ் என்பவரும் மடத்தில் சேர்ந்தார்கள். இவர்களுக்கு முறையே சங்கர், சாந்த, சிவ, சக்தி ஆகிய நாமங்களை மதுரானந்த சுவாமிகள் வழங்கினார். 1982ல் சிவ சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். 1989.ல் மற்ற மூவருக்கும் ஸ்ரீமத் மதுரானந்தர் விரஜா ஹோமம் வளர்த்து முறைப்படி துறவற தீட்சை அளித்தார். அவர்களுக்கு முறையே சுவாமி ஓங்காரநந்தர், சுவாமி பிரணவாநந்தர், சுவாமி சைதன்யாநந்தர் ஆகிய துறவற நாமங்களை வழங்கினார்.
சுவாமி ஓங்கார நந்தர் மடத்தை விட்டு பிரிந்து 2003.ல் இறைவனடி சேர்ந்தார். சுவாமி பிரணவானந்தர் குமாரகோயிலை அடுத்த வேளிமலையில் தனியாக தங்கி தவ வாழ்வு வாழ்ந்து வருகிறார். ஸ்ரீமத் மதுரானந்த சுவாமிகள் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் 1998 மே மாதம் முதல் சுவாமி சைதன்யாநந்தர் ஆசிரத்தின் தலைமை பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். 1999 ஜூன் 2.ம் நாள் மதுரானந்த மஹராஜ் மகா சமாதி அடைந்தார். தற்பொழுது ஸ்ரீராம்,ஸ்ரீசங்கர் ஆகிய இரண்டு பிரம்மச்சரிகளும் ஆசிரமத்தில் சேர்ந்து தொண்டாற்றி வருகின்றனர்.
எழுத்துப்பணி
சமய வகுப்பு நூல்கள், திருவிளக்கு பூஜை தவிர பல நூல்களை எழுதியுள்ளார் சுவாமிகள் எளிய பூஜை முறை. ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யை கௌரிமா வரலாறு. சுவாமி அம்பானந்த வரலாறு சமஸ்கிருத மலையாள நூல்கள் பலவற்றை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவர் எழுதிய பாடல்கள் மதுர கீதம் எனும் பெயரில் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளது. இவர் முயற்சியால் போடப்பட்ட சாலையை மக்கள் மதுரானந்தர் சாலை என்றே அழைத்து வருகின்றனர் ஆசிரம அமைப்பு
அலங்கார வளைவு
முதலில் நம்மை வரவேற்பது ஆசிரம அலங்கார வளைவு. இது 2001 மே-1 அன்று ஸ்ரீமத் கௌதமானந்தஜி மஹராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு பொருளுதவி செய்தவா திரு. அழகி. லயன் சி.மணி.
அலுவலக கட்டிடம்
நேராக சென்றால் அலுவலகக் கட்டிடம் இதனுடன் புத்தக விற்பனை நிலையம், சமையலறை தங்கும் அறைகள் சேர்ந்தே உள்ளன. இது 1994,ல் ஸ்ரீமத் சுவாமி தன்மயானந்தஜி அவர்களால் திறக்கப்பட்டது. இதற்கு அதிக நிதி வசூலுக்கு உதவியவர் ஸ்ரீமத் சுவாமி தன்மயானந்தஜீ அவர்களே.
பார்வதி குடீர்
அலுவலக கட்டிடத்திற்கு வலப்பக்கம் பார்வதி குமர் உள்ளது. இதில் ஸ்ரீஇராமகிருஷ்ணர் ஆலயம் உள்ளது. 1967 ராதாகிருஷ்ணபுரம் ஸ்ரீ வாசுதேவனுண்ணி அவர்களால் அவரின் தாயார் நினைவாக கட்டப்பட்டது. இதனுள் உள்ள ஒரு சிறிய அறையில் சுவாமி அம்பானந்தர் உபயோகித்த பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன.
ஸ்ரீ அம்பானந்தர் பிரார்த்தனை மண்டபம்
ஸ்ரீராமகிருஷ்ணர் ஆலயத்திற்கு முன் பக்கம் ஸ்ரீஅம்பானந்தர் பிரார்த்தனை மண்டபம் உள்ளது. இது நாகர்கோவில் டாக்டர் ப. அருணாச்சலம் அவர்களின் முயற்சியால் மூலம் மலேசிய அன்பர்களின் நிதி உதவியுடன் 1979.ல் கட்டப்பட்டது.
சக்தி குமர்
ஆலயத்திற்குத் தெற்கே 1989 கட்டப்பட்டது. சக்தி குமர் இதில் ஆசிரம் தலைவர் தங்கி இருப்பார்.
பால முருகன் இல்லம்
சக்தி குமருக்கு தெற்கே 100 அடி தூரத்தில் பாலமுருகன் இல்லம் உள்ளது. இதன் முதல் அறையில் சுவாமி மதுரானந்தர் பயன்படுத்திய பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இங்கு அமர்ந்து தியானம் செய்வர். மற்ற இரு அறைகள் தங்குவதற்கு பயன்படுகின்றன.
சுவாமி யதிஸ்வரானந்தர் குடீர்
2002ல் திருமதி பூமாபத்மநாதன் அவர்களின் உதவியால் சுவாமி யதீஸ்வரானந்தர் குமர் கட்டப்பட்டது. இது சுவாமி கௌதமானந்தஜீ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதில் பிற ஆசிரமத்தில் இருந்து வரும் துறவிகள் தங்குவர்.
வேணுகோபால் நினைவகம், மீனா குடீர்
இவை இரண்டும் ஆசிரம வடக்கு எல்லையில் திரு. பழனியாண்டிப் பிள்ளை அவர்கள் வழங்கிய பூமியில் கட்டப்பட்டது. இதில் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவார்கள். சென்னை ஸ்ரீமதி கிருஷ்ணபாய் அவர்கள் பொருளுதவியில் 1988.ல் வேணுகோபால் நினைவகமும், நாகர்கோவில் திரு. ஜிதுளசிதாஸ் அவர்கள் பொருளுதவியில் 1995 ல் மீனா குடிரும் கட்டப்பட்டது.
ஆசிரம கிணறு
1943 ல் தலக்குளம் சிவகாமி அம்மையார் செலவில் ஆசிரம கோவிலுக்கு அருகில் ஒரு கிணறு தோண்டப்பட்டது. 1990 வரை இக்கிணறு பயன்படுத்தப்பட்டது.
பின்னர் ஊற்றில்லாமல் வறண்டதால் இக்கிணறு மூடப்பட்டது. தற்பொழுது தெற்கு எல்லையில் உள்ள கிணறு சரக்கல்விளை திரு.ராமசாமி நாடார் அவர்களின் உதவியால் 1998-ல் வெட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய பெருமைக்குரிய விவேகானந்தா ஆசிரமம் அதன் செயல்பாடுகள் மற்றும் பணிகளால் மேலும் பெருமை அடைந்துள்ளது.
முடிவுரை
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல எல்லா ஊர்களிலும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரும் ஒரு புண்ணியதலம் வெள்ளிமலை. அத்தகைய பிரசித்தி பெற்ற வெள்ளிமலையில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பக்தப்பெருமக்களின் வருகையால் இன்று கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் தென் கேரளம் முழுவதும் இக்கோயில் புகழ்பெற்று உள்ளது.
இதன் அமைவிடமும், இயற்கை அமைப்பும் காண்போரை கவரும் விதத்தில் உள்ளது.
கோவில் அமைந்து இருக்கும் குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ விவேகானந்தா ஆசிரமம். ஹிந்து சமய வளர்ச்சியும், புதுப்பொலிவும் பெற்று திகழ வேண்டும் என்று விரும்பிய நமது முன்னோர்களும் சமய சான்றோர்களும் சேர்ந்து உருவாக்கியதே இந்த ஆசிரமம் எண்ணிறந்த ஆன்மீக பக்தர்களுக்கு ஹிந்து சமய தத்துவங்களையும் ஹிந்து சமய பொக்கிஷங்களையும் பற்றிய அறிவை வழங்கியதோடு, புத்துணர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
அழிந்து கொண்டிருந்த, கொண்டிருக்கும் நமது ஹிந்து சமயத்தை அதன் அழிவிலிருந்து மீட்டு தன் பழமையான உன்னத நிலையை அடைய வழிகாட்டுகிறது ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம். ஆயிரக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் சமயத்தின் பெருமைகளையும் உணர வைத்து மதமாற்றம் என்னும் ஒரு பெரிய ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் உன்னதமான ஒரு பணியை செய்து வருகிறது விவேகானந்த ஆசிரமம்.
ஆசிரமும், ஆசிரமம் தொடங்கப்பட்டதும், ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கும் இடமும் அனைத்துமே இறைவன் செயலே ஆகும். ஆசிரமத்தின் ஸ்தாபகர் ஸ்ரீமத் சுவாமி அம்பானந்தஜீ கேரளாவில் பிறந்து, வளர்ந்து, படித்து பணியாற்றியவர். தறவு வாழ்வு மேற்கொண்டு கன்னியாகுமரியில் பல ஆசிரமங்களில் தங்கி தவம் இயற்றி வந்தார்.
ஆன்மீக பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்கி பக்தரின் நிலத்திலேயே ஆசிரமம் அமைத்தனர். ஸ்ரீமத் அம்பானந்தருக்கு பிறகு ஸ்ரீமத் மதுரானந்தர் தலைமைப் பொறுப்பேற்றார்.
விவேகானந்த ஆசிரமம் செய்து வரும் பணிகள் அளவிலாதவை. சமய வகுப்பு, பூஜாரி பயிற்சி முகாம், ஆசிரியா பயிற்சி முகாம் என பல விதங்களில் மக்களுக்கு பயிற்சிகள் கொடுத்து மக்களை நல்வழிப்படுத்துகிறது.நெட்டாங்கோடு என்னும் ஊரில் ஸ்ரீசாரதேஸ்வரி ஆசிரமம் அமைத்து பெண்களும் துறவு வாழ்வு வாழ வழி செய்துள்ளது விவேகானந்த ஆசிரமம்.
வெளி சமய வகுப்பு என்ற ஒரு அரிய அமைப்பின் மூலம் ஏழை எளியவர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து அவர்களையும் சமுதாயப் பணியில் ஈடுபட செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்று பல மாவட்டங்களிலும் சமய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமய வகுப்புகள் இன்று வெகு வேகமாக பரவி வருகின்றன. அத்துடன் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பாடத்திட்டங்கள், அதற்கு தேர்வுகள், வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் என மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. விவேகானந்த ஆசிரமம். மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்துவதுடன். நல்ல சிந்தனையோடு வளரவும் அவர்கள் உர்த்தப்படுகிறார்கள். சமயக்கல்வியை பரப்பும் உள்ளதப் பணியில் ஆயிரக்கணக்காளோர் பணியாற்றி வருகின்றனர்.
ஆன்மீகப் பணி செய்வதோடு மட்டுமல்லாமல் வெள்ளம், மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களை தேடிச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தன்னம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை ஆதரித்து அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை ஸ்ரீவிவேகானந்த ஆசிரமம். சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனுடன் சேர்ந்து வழங்கியது.
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் சாரதா மடம் இவற்றுடன் சேர்ந்து ஸ்ரீ விவேகானந்த ஆசிரம வீடுகளையும், தொழில் கருவிகளையும், வழங்கி அவர்களை ஆதரித்தது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவும், உலக மக்களுக்கு ஆன்மீக அறிவையும், சமயக் கருத்துக்களை போசித்து வருகிறது.
மேலை நாகரிகத்தில் மூழ்கி கிடக்கும் மக்களுக்கு நம் நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறி அவர்களை மீண்டும் தங்கள் பழம்பெரும் புனிதமான கலாச்சாரத்திற்கு இட்டு செல்ல ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம் உதவுகிறது. பாரத பண்பாட்டு எழுச்சிக்கு மிக முக்கிய அம்சமாக விளங்குவது இம்மாதிரியான ஆசிரமங்களே என்பதில் சிறிதும் ஐயமில்லை.