வெள்ளி மலை முருகன் கோவிலின் சிறப்பு
இருப்பிடம்
தமிழ்நாட்டிலுள்ள 30 மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் நான்கு தாலுகாக்களை கொண்டது. அவை அகஸ்தீஸ்வரம், தோவாளை. கல்குளம், விளவங்கோடு ஆகும். இதில் கல்குளம் தாலுகா குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ கடியப்பட்டணம் பகுதியில் அமைந்துள்ளது வெள்ளிமலை. இவ்விடம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது. கல்குளம் தாலுகாவின் தலைநகர் தக்கலையிலிருந்து தெற்கே 10 கி.மீ தொலைவிலும், திங்கள் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு தான் புகழ்பெற்ற முருகன் கோவில் காணப்படுகிறது.
கோவில் தோன்றிய வரலாறு
“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி. இதன்படி கன்னியாகுமரி மாவட்டம் நூற்றுக்கணக்கான கோவில்களை உள்ளடக்கியது. இதில் முருகன் கோவில்கள் பல. இவற்றில் சிறப்பு வாய்ந்தது வெள்ளிமலை முருகன் கோவில். இக்கோயில் தோன்றிய குறிப்பிட்ட காலம் தெரியவில்லை. ஆனால் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.
அமைவிடம்
பொய்தைகளும் வயல்வெளிகளும், மலைகளும் சூழ சுமார் 200 அடி உயர் குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோயில், குன்றின் மேல் 7 அடி உயரத்தில் வடகிழக்கு பகுதியில் கிழக்கு முகமாக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் அமைப்பு
இப்பொழுது இருக்கும் கருவறை மண்டபமும் அதன் முன் பக்தர்கள் இருக்க வசதியான ஓட்டு பணி மண்டபமும் தான் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இன்று காணப்படும் எவ்வித வசதியும் அன்று கிடையாது.
கிழக்கு பக்கம் 90 படிகளுள்ள படிக்கட்டு ஆலயத்தின் முன் நம்மை அழைத்து செல்லும். 22 -வது படியில் ஒரு பெரிய அலங்கார வளைவும், 55 மற்றும் 71 வது படியில் களைத்து வரும் பக்தர்கள் ஓய்வு கொள்ள சிறு படி மண்டபமும் உள்ளது. இவை முறையே நாகர்கோவில் காமராஜ் செல்லப்பழம் மற்றும் அவர்களின் புதல்வர்கள், ஆசாரிபள்ளம் கோபிநாதன் ராதாம்மாள் மற்றும் அவர்களின் புதல்வர்கள். இரணியல் செக்காலத்தெரு சுப்பையா பிள்ளை மகன் மகாதேவன் இவர்களால் உபயம் அளிக்கப்பட்டது.
கோயில் வாசலில் இரண்டு புலியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒட்டும் கட்டிடமாக இருந்த முன் மண்டபம் 2002.ல் கான்கிரீட் போடப்பட்டது. கிழக்கு வாசலில் இருந்து 50 அடி தூரத்தில் முருகப்பெருமானின் திரு உருவம் உள்ளது. கோல மயிலுடன் ஐந்து அடி உயரமுள்ள விக்ரகம் 2 ½அடி உயரமுள்ள பீடத்தின் மேல் அமைந்துள்ளது கடவுள் சிலை பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. கோவிலின் முதல் உற்சவ மூர்ததி சிலை தங்கத்தால் ஆனது. அது திருட்டுப் போனதால் செம்பினால் வைக்கப்பட்டு வெள்ளி, தங்க நகைகள் அணியப்பட்டுள்ளன. மூலவர் சிலை குழந்தை வடிவாய் அமைந்துள்ளது.
கிழக்கு வாசலிலிருந்து 50 அடி தூரத்தில் முருகப்பெருமானின் திருவுருவம் அமைந்திருந்தாலும் பத்தாம் உதய நாளில் (சித்திரை மாதம் பத்தாம் நாள்) காலைக் கதிரோன் தன் ஒளிக்கிரணங்களை முருகப் பெருமானின் திருவடியில் சமர்ப்பிக்கும் காட்சியை காணலாம் முன்மண்டபத்தில் வடக்கு தெற்கு பக்கத்தில் தலா இருவாயில்கள் வீதம் 4 வாயில்கள் உண்டு. தெற்கு பக்க முதல் வாயில் வழி வந்தால் அங்கே மணி மண்டபமும், மடப்பள்ளியும் (சமையல் அறை) உள்ளது. ஆனால் மக்கள் சாதாரணமாக தெற்கு பக்க வாயில் வழியாக வெளியே வருவா.
இங்கே கன்னிமூலைப்பகுதியில் விநாயகருக்கு கோயிலும் அதன் முன் ஒரு சிறுமண்டபமும் அதற்கு வடக்கே சாஸ்தா கோயிலும் அதன் முன் ஒரு சிறு மண்டபமும் உள்ளது. இந்த இரு ஆலயங்களை சுற்றிவரும் பொழுது முருகப் பெருமானின் ஆலயத்திற்கு வடக்கே, மேற்கு நோக்கிய படி சிவபிரான் ஆலயமும் அதன் முன் ஒரு சிறுமண்டபமும் உள்ளது. அதன் பின் பக்கம் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களின் திருவுரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாயில் தெற்கு பக்கம் உள்ளது.
இத்தனை ஆலயங்களையும் சுற்றி இரும்புக்கம்பி வேலி போட்டு பாதுகாக்கப் படுகிறது. முருகப்பெருமானுக்கும், விநாயகருக்கும், சாஸ்தாவிற்கும் ஆலய விமானங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. முருகப்பெருமானின் முன் மண்டபத்தின் மேல் வடக்கு தெற்கு பக்கங்களில் தலா மூன்று வீதம் ஆறு படைவீடுகளின் திருவுருவங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
முருகப்பெருமானை சுற்றி வர கம்பி வேலியால் பாதுகாக்கப்பட்ட ஒரு பிரகாரம் அடுத்து இப்பகுதியின் கீழே தற்போது அமைந்துள்ள பாதை இரண்டாவது பிரகாரம். மலையை சுற்றி அமைந்துள்ள | கி.மீட்டர் நீளமுள்ள தார்ச்சாலை ஒரு பிரகாரம். ஆக ஆலையத்தின் மூன்று பிரகாரங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் மேற்கு பகுதியில் தெற்கு பகுதி வாயில் வழி கீழே இறங்கியது வலப்பக்கம் ஆலய நிர்வாக அலுவலகம் உள்ளது அதனையடுத்து தெற்கே 40 அடிநீள கலையரங்கம் இதன் எதிரே சுமார் 60 அடி நீள சஷ்டி மண்டபம் உள்ளது. கலை அரங்கத்திற்கும் சஷ்டி மண்டபத்திற்கும் இடையே ஒரு கடை உள்ளது. இக்கடையில் பூஜைக்கான பொருள்கள் வாங்கலாம்.
பஜனைக் கட்டிடம்
தெற்கு பக்க அலங்கார வளைவு வழி கீழே இறங்க வலது பக்கம் ஸ்ரீபால முருகன் பஜனை சங்க கட்டிடம் உள்ளது. இதில் ஞாயிறு கிழமைகளில் இலவசமாக கர்நாடக சங்கீதமும், பஜனையும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. பெருஞ்செல்வவிளை பரமேஸ்வரன், மணவிளை சுப்ரமணிய நாடார் ஆகியோரின் உறுதுணையால் இக்கட்டிடம் கட்டப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சங்கீதம் கற்பிக்க சங்கம் அமைத்து இலவசமாக செயல்படுவது வெள்ளிமலை பஜனை சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னதானம்
பஜனை கட்டிடத்திற்கு எதிரே கஞ்சிப்புரை உள்ளது. இதில் அன்னதான சமையல் செய்வர். இத்திருக்கோயிலில் கஞ்சி தாமம் 100 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. இரணியல் மேலத்தெருவை சார்ந்த குணமாலை செட்டியார் என்ற பெரியவர் வீடு வீடாக சென்று அரிசி தானம் வாங்கி கஞ்சி தாமம் செய்து வந்தார்.
பிடி அரிசியில் தொடங்கி இன்று பல்லாயிரக்கணக்கான பக்த பெருமக்களுக்கு உணவு கொடுக்கும் தாம ஸ்தாபனமாகவும் செயல்பட்டு வருகிறது.
உணவு விடுதியில்லாத இப்புண்ணியத்தலத்தில் வெகு தூரத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவளிப்பது ஒரு வரப்பிரசாதமாகும். வெள்ளி, ஞாயிறு கிருத்திகை போன்ற நாட்களில் எல்லாம் அன்னதானம் நடைபெறுகிறது. தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அன்னதான பிரசாதம் பெற்று செல்வர். கஞ்சிப்புரைக்கு தெற்கே ஆறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பக்தர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
பூஜை நேரம்.
தொடக்க காலத்தில் தற்பொழுது நடைபெறுவது போன்ற பூஜைகள் இல்லை. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் சிறப்பு பூஜை நடக்கும். மற்ற நாட்களில் எல்லாம் ஆள் நடமாட்டமே இருக்காது. அப்பொழுது கல்படியில் கல்வி கேள்விகளிலும் பண பலத்திலும், ஆள் பலத்திலும் சிறந்த ஒரு பிராமண குடும்பம் இருந்தது. அக்குடும்பத்திலுள்ள திரு. இராகவ ஐயர் மற்றும் திரு. ஹரிஹர அய்யர் இவ்விருவரும் பூஜை செய்து வந்தனர். தற்பொழுது இவர்களின் வம்சத்தை சார்ந்த திரு. பத்மனாப ஐயர் அவர்கள் பூஜை செய்து வருகிறார்.
தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும் மாலை 5.30 முதல் 7.45 வரையும் ஆலய தரிசனத்திற்காக நடை திறந்து இருக்கும். வெள்ளி ஞாயிறு ஆகிய தினங்களில் பகல் 12 மணி வரையும், விசேஷ அபிஷேகங்களுள்ள நாளில் பிற்பகல் 1 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம். மேலும் பிரதோஷ நாட்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்பாகவே நடை திறக்கப்படும்.
விழாக்கள்
வைகாசி விசாகம், தைப்பூசம், விஜயதசமி, மண்டல பூஜை நாள் (மார்கழி 11) சஷ்டி ஆறு நாட்கள், வருஷாபிக நாள்களில் விழா நடைபெறும். இதில் சஷ்டி விழா ஆறு நாட்கள் சிறப்பாக நடைபெறும் ஆறு நாட்கள் விரதமிருக்கும் பக்தர்கள் சஷ்டி மண்டபத்தில் தங்குவர். முதல் நாள் அகண்ட நாமமும் மற்ற ஐந்து நாட்கள் பகலில் கந்தபுராணத் தொடர் சொற்பொழிவும் மாலையில் சொற்பொழிவ, இன்னிசை முதலியவை நடைபெறும்.
ஆறாம் நாள் மாலையில் சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு களிப்பர் .முருகப் பெருமான சூரனோடு யுத்தம் செய்ய மலையை சுற்றிலுமுள்ள சாலையில் கிரிவலம் வந்து மாலை சூரிய அஸ்தமன வேளையில் கிழக்கு படிக்கட்டு துவங்கும் இடத்தில் சூரனை வதைப்பர். பக்தர்கள் வேலனுக்கு அரோகரா என கோஷம் செய்வர். இரவு முருக பிரான் ஆலய மூன்றாம் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வருவார்.
சில தெய்வீக நிகழ்ச்சிகள்
நெருப்பு சுவாமியார் குகை
கிழக்கு படிக்கட்டின் அருகில முன்பு ஒரு பெரிய குகை இருந்தது. அதில் ஒரு துறவி தங்கி ஹோமத்தீ வளர்த்து தவம் இயற்றி வந்தார் எனவும் அந்த ஹோம் பஸ்பத்தினால் மக்கள் பிணிதீர்த்தார் எனவும் பக்தர்கள் வாயிலாக அறிகிறோம். மேலும் இவர் உணவு உண்பதில்லை எனவும் நெருப்பு மூட்டி அதனருகில் வாயை திறந்த வண்ணம் இருப்பார் எனவும் பக்தர்கள் கூறி உள்ளனர். ஒரு நாள் அனைவரும் காண வெளியே வந்து கோவில் பக்கம் வந்து திடீரென்று மறைந்தார். தற்போது அக்குகை படிகட்டுகளுக்காக அகற்றப்பட்டது.
ஆலமூட்டுக் குகை
குறுங்கட்டி பொத்தையை ஒட்டிவடக்கு பக்கம் ஒரு சிறிய குகை உள்ளது. முற்காலத்தில் கொள்ளையர்கள் காவலர்கள் கண்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இக்குகையை பயன்படுத்தினர். இன்று இக்குகை இல்லை எனப்படும் அளவிற்கு கல்லும் மண்ணும் மூடிய நிலையில் அது உள்ளது.
தீர்த்தம்
வெள்ளிமலையில் ஆலய பூஜைக்கும் பக்தர்களின் பயன்பாட்டிற்கும் நீரில்லாத நிலையில் பத்தர்கள் துன்பமற்றனர். பக்தர்களுக்கு இரங்கிய முருகப்பெருமான் 1927ம் ஆண்டு ஒரு நாள் அங்கு தங்கி தவமும் தொண்டும் செய்து வந்த செட்டியார் மடம் விஸ்வநாத துறவியின் கனவில் தோன்றி அவரை மலையின் தென்மேற்கு பக்கம் அழைத்து சென்று தனது வேலால் பாறையில் குத்த நீர் பொங்கி வந்தது. இதை கண்ட துறவி மறுநாள் மக்களிடம் விவரம் கூற அனைவரும் அவர் கனவில் கண்ட இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது அவ்விடத்தில் வேல் குறியும் தண்ணீரும் கண்டனர். அங்கே கிணறு தோண்டப்பட்டது. இந்த கிணற்று நீர் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. 200 அடி உயரமுள்ள மலையில் இந்த இடத்தில் நீருற்று இருப்பது முருகப் பெருமானின் கருணையே ஆகும்.
மயில் ஆடும் பாறை
கோவிலின் வட கிழக்கே ரோட்டிற்கும் கிழக்கே இன்று சிதைந்த நிலையிலிருக்கும் பெரிய பாறையில் மயில் ஆடிக் கொண்டிருக்கும் இதை மயில் ஆடும் பாறை என்பர்.
முதியோர் தாழி
இம்மலையின் சில இடங்களில் இருந்து முற்காலத்தில் முதியோர்களை வைத்து சமாதி வைக்கும் முதியோர் தாழிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே மிகப் பழங்காலத்திலேயே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்று தெரிய வருகிறது.
வேலுத்தம்பி தளவாய்
வீரத்திருமகன் வேலுத்தம்பிதளவாய் 1765.ல் பிறந்து 1809.ல் இறைவனடி சேர்ந்தார். இவ்வீரத் திருமகனை ஈன்றெடுக்க அவரது அன்னை வெள்ளிமலையில் தவமிருந்ததாகவும் அதன் பயனாக அவ்வீரனை ஈன்றெடுத்ததாகவும் கூறுவர்.
கோயிலின் மேற்கே அலங்கார வளைவுடன் அமைந்த 30 படிக்கட்டுகள் தாண்டி மேலும் 100 படிகள் இறங்கி வந்தால் பாறையில் சில எழுத்துக்களும் சில அடையாளங்களையும் காணலாம். இதை நந்தியின் பாதசுவடுகள் என்று மக்கள் நம்புகின்றனர். இங்கிருந்து 25 படிகள் இறங்கினால் சாலையின் மேற்கு பக்கம் ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தின் அலங்கார வளைவு நம்மை வரவேற்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றானது மிகப்பழமையானதும் ஆன கோயில்களில் ஒன்றாகும் வெள்ளிமலை முருகன் கோயில் இன்றும் வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆன்மீக பசியையும் வயிற்று பசியையும் போக்கி நன்மை அளிக்கிறது. இக்கோயிலுக்கு நடந்தே வரும் பக்தர்கள் உள்ளனர். இங்கு அமைந்துள்ள விவேகானந்த ஆசிரமம் பற்றி அறியாதவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லை எனலாம். அத்தகைய சிறந்ததொரு தலமாக வெள்ளிமலை திகழ்கிறது. ஆசிரமத்தையும் அதன் பணிகளையும் அடுத்த பகுதியில் விரிவாக காணலாம்.