கீதை பாராணயப் போட்டி பாடல் சின்மயா தமிழ் பகவத் கீதை பாராயணப் போட்டி 2025 புருஷோத்தம யோகம் 15-ம் அத்யாயம் பாடிடு… படித்திட்டு… புரிந்திடு… வாழ்ந்திடு… கீதையை பாடி..கண்ணனை கவர்ந்திடு…
பதினைந்தாம் அத்யாயமாம்
பாடல் – 1
மேலே வேர்கள் கீழே கிளைகள் வேத மந்திரங்களே இலைகள் அரசமரம் அழியாதென்பர் இதை அறிபவனே வேதியன்.
பாடல் – 2
அதன்கிளைகள் மேலும் கீழுமாய்ப் படர்ந்து புலப்பொருட்கள் எனும் தளிர்கள் விட்டு குணங்களால் செழித்து செயல்களெனும் வேர்கள் பூவுலகில் கீழாய்ப் பரவியுள்ளன.
பாடல் – 3
இங்கதன் உருவத்தைக் காண இயலாது ஆதியும் அந்தமும் இருப்பும் இல்லா அரச மரத்தின் நன்கூன்றிய வேரை பற்றின்மை எனும்வாளால் வெட்டி வீழ்த்தி.
பாடல் – 4
எப்பதம் எய்தபின் மீண்டும் வாராரோ அப்பதம் தனையே நீ தேடி நாடு யாரிடமிருந்து இவ்வுலகம் தோன்றியதோ அந்த ஆதி புருஷனைச் சரணடைகின்றேன்.
பாடல் – 5
பற்றெனும் மாசு நீங்கி மயக்கமில்லா ஆசைகள் நீங்கி தன்னில் நிலை பெற்று இன்ப துன்ப இருமைகளில் விடுபட்ட ஞானியர் அழியாப்பதம் அடைகின்றனர்.
பாடல் – 6
எதைச் சூரியன் ஒளிர்விக்காதோ தீயும் மதியும் ஒளிர்விக்காதோ
எங்குச் சென்றவன் மீண்டும் வாரானோ அதுவே என் மேலான பதமாம்.
பாடல் – 7
ஜீவ உலகில் என்றும் உள்ள ஜீவாத்மா எனது அம்சமே இயல்பில் நிலைபெற்ற ஜீவன் மனத்தோடு புலன்களை ஈர்க்கும்.
பாடல் – 8
உடல் வேண்டிடும் ஜீவாத்மா எவ்வுடல் விட்டுச் செல்கிறதோ காற்று மணத்தைச் சுமப்பதுபோல் புலன்களைக் கொண்டு செல்கின்றது.
பாடல் – 9
செவியை விழியை மெய்யை நாவை நாசியை மனத்தையும் தனதாக்கிக் கொண்டு ஜீவன் புலனின்பங்களைத் துய்க்கிறான்.
பாடல் – 10
குணங்களோடு இருப்பினும் இருக்கையிலும் செல்கையிலும் துய்க்கையிலும் மூடர் அறியார் ஞானக் கண்ணுள்ளோர் அறிவரே.
பாடல் – 11
மெய்ப்பொருள் நாடிடும் யோகியர் தன்னுள் ஆத்மனைக் காண்கிறார் முயன்றும் முதிர்ச்சியற்ற மூடர் ஆத்மனை என்றும் காண்கிலர்.
பாடல் – 12
வையமெங்கும் ஒளிர்விக்கும் சூரியனில் உள்ள ஒளியும் நிலவில் தீயில் உள்ள ஒளியும் எனது ஒளியே என்றறிவாய்!
பாடல் – 13
பூமியுள் புகுந்து உயிர்களை என் பேரொளியால் தாங்குகின்றேன் அமுத வடிவான மதியாய் பயிர்களனைத்தும் வளர்க்கின்றேன்.
பாடல் – 14
நானே உதரக்கனலாக உயிர்களின் உடலில் இருந்து பிராண அபானத்துடன் கூடி நால்வகை உணவைச் செரிக்கின்றேன்.
பாடல் – 15
எல்லார் இதயத்திலும் இருப்பவன் நானே நினைவும் அறிதலும் மறத்தலும் எனதே வேதங்களால் அறியப்படும் பொருள் நானே வேதங்களைச் செய்தவன் உணர்ந்தவன் நானே.
பாடல் – 16
அழிவன அழியாதனவாய் உயிர்கள் இருவகையாகும் மாறுகின்ற உயிர்கள் அழியும் மாறாதவன் நிலைத்தவன் என்பர்.
பாடல் – 17
எவர் மூவுலகிலும் நிறைந்து தாங்குபவர் அழிவற்றவரோ அவரே வேறான பரமாத்மா உன்னத உயிர் எனப்படுவார்.
பாடல் – 18
அழியும் அழியா நிலைக்கப்பால் எதனால் நான் இருக்கின்றேனோ அதனால் வையமும் வேதமும் புகழும் உன்னத உயிர் நானே.
பாடல் – 19
எவன் மயக்கம் நீங்கி எனை உன்னத உயிராய் அறிவானோ அவனே எல்லாம் அறிந்தெதிலும் என்னையே தொழுகின்றான் பாரத!
பாடல் – 20
பாவமிலானே! இவ்வாறுனக்கு மறைபொருள் ஞானம் உரைத்தேன் இதை அறிந்து அறிவுள்ளவன் தன்கடன் ஆற்றுகின்றான் பாரத!
ஓம் தத் ஸத் இங்ஙனம்
பிரம்ம வித்யையாம் யோக சாஸ்திரமாம் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஸ்ரீமத் பகவத் கீதை எனும் உபநிஷத்தில் புருஷோத்தம யோகம் எனும் பதினைந்தாம் அத்யாயமாம்.
சின்மயா தமிழ் பகவத் கீதை பாராயணப் போட்டி 2025 | புருஷோத்தம யோகம் 15-ம் அத்யாயம் | போட்டி பாடல்
ஸ்ரீ பகவான் கூறினார்:
மேலே வேருள்ளதும், கீழே கிளைகளுள்ளதும் ஆன அரச மரத்தை, அழிவற்றது என்று கூறுகின்றனர். எதனுடைய இலைகள் வேதங்களோ, அதை எவன் அறிகிறோனோ அவன் வேதத்தை அறிந்தவன். -1
அந்த மரத்தினுடைய கிளைகள், குணங்களால் செழிப்படைந்து, புலனின்ப விஷயங்கள் என்னும் தளிர்விட்டு, கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மனித உலகில் கர்மபந்தத்தை விளைவிக்ககூடிய வேர்கள் கீழ் நோக்கி பரவியிருக்கின்றன. -2
இங்கு அதனுடைய ரூபம் அப்படி புலப்படுவதில்லை. அதற்கு முடிவுமில்லை, ஆதியுமில்லை, இருப்புமில்லை. இந்த மிகவும் பலமாக வேரூன்றிய அச்வத்த மரத்தை, திடமான பற்றின்மை என்னும் வாளால் வெட்டி; -3
பிறகு, அந்த பிரம்மபதம் தேடப்பட வேண்டும். எங்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, யாரிடமிருந்து புராதனமான தொழில் பெருக்கெடுத்ததோ, சரணடைகிறேன். அந்த ஆதிபுருஷனை -4
கர்வம், மோகம் இரண்டும் அற்றவர்களாய், பற்று என்னும் குற்றத்தை வென்றவர்களாய், ஆத்மாவிலே எப்பொழுதும் வசிக்கின்றவர்களாய், ஆசைகள் இல்லாதவர்களாய், சுக துக்கம் எனப்படுகின்ற இருமைகளினின்று விடுபட்டவர்களாய், மயக்கமில்லாதவர்களாய் (இருக்கும் அவர்கள்) அந்த அழிவில்லா நிலையை அடைகிறார்கள். -5
எங்கு சென்ற பிறகு திரும்பி வருவதில்லையோ, எதை சூரியன் விளக்குகிறதில்லையோ, சந்திரனும் விளக்குகிறதில்லையோ. தீயும் விளக்குகிறதில்லையோ, அது என்னுடைய பரமபதம். -6
என்றென்றும் உள்ள எனது அம்சமே, ஜீவர்களது உலகில், ஜீவனாக தோன்றி, பிரகிருதியிலேயே இருந்து மனதை ஆறாவதாக உடைய இந்திரியங்களை போகத்தில் கவர்கிறது. -7
வாயுவானது இருப்பிடத்திலிருந்து (பூவினின்று) மணங்களை எடுத்துக் கொண்டு போவது போல, ஜீவன் (உடலுக்கு ஈஸ்வரன்) புதிய சரீரத்தை அடையும் போதும், பழைய சரீரத்தை விட்டு போகும் போதும், இவைகளை (மனதை ஆறாவதாக இந்திரியங்களை) எடுத்துக் கொண்டு போகிறான். உடைய -8
இந்த ஜீவாத்மா காது, கண், மெய், நாக்கு, நாசி, மனம் இவற்றைத் தனதாக்கிக் கொண்டு பொருட்களை அனுபவிக்கிறான். -9
உடலை விட்டுப் போகின்ற பொழுதும், உடலிலேயே இருக்கும் பொழுதும், அனுபவிக்கும் பொழுதும், குணத்தோடு கூடியிருக்கும் பொழுதும், அதிமூடர்கள் (ஆன்மாவை) காண்பதில்லை. ஞானக் கண்களையுடையவர்கள் காண்கிறார்கள். -10
பார்க்கிறார்கள். முயற்சி செய்கின்ற யோகிகள், இந்த ஆத்மாவை தங்களுக்குள் இருப்பவனாய் முயற்சியுடையவர்களாக இருந்தாலும், பண்படாத மனமுடையவர்கள், அறிவற்றவர்கள், இந்த ஆத்மாவை பார்ப்பதில்லை. -11
சூரியனிடத்துள்ள எந்த ஒளி உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறதோ, எந்த ஒளி சந்திரனிலும், எந்த ஒளி அக்னியிலும் (உள்ளதோ), அந்த ஒளியை என்னுடையது என்று அறிக. -12
நான் என் சக்தியால் பூமியினுள் பிரவேசித்து உயிர்களை தாங்குகிறேன். இனிமை வடிவாகிய சந்திரனாகவும் ஆகி, அனைத்து மரம், செடி, கொடிகளையும் போஷிக்கிறேன். -13
நான் வைச்வானரன் என்கிற அக்னியாக ஆகி, பிராணிகளுடைய உடலில் இருந்து கொண்டு பிராணனுடனும் அபானனுடனும் கூடி, நான்கு விதமான உணவை, ஜீரணம் செய்கிறேன். -14
நான் எல்லோருடைய இதயத்தில் தங்கியிருக்கிறேன். மேலும், என்னிடமிருந்து நினைவு, ஞானம், அவற்றின் அழிவும் ஏற்படுகின்றன. எல்லா வேதங்களாலும் நானே அறியப்படும் பொருளாகிறேன். வேதாந்தத்தைச் செய்தவனும், வேதத்தை அறிந்தவனும் நானே. -15
‘க்ஷரன்’ என்றும் ‘அக்ஷரன்’ என்றும், இந்த இரண்டு புருஷர்கள் உலகில் உண்டு. வடிவெடுத்தவைகள் எல்லாம் ‘க்ஷரபுருஷன்’ என்றும். வடிவங்களுக்கு காரணமான கூடஸ்தன் ‘அக்ஷரபுருஷன்’ என்றும் கூறப்படுகிறது. -16
மற்றும், இவைகளுக்கு அன்னியமானவர் உத்தமமான புருஷன் (புருஷோத்தமன்) பரமாத்மா என்று அழைக்கப்படுபவர். அவரே அழிவற்றவர், ஈஸ்வரன், மூன்று உலகங்களுக்குள்ளும் புகுந்து தாங்குகிறார். -17
எக்காரணத்தால் நான் க்ஷர புருஷனை கடந்தவனோ, அக்ஷர புருஷனுக்கும் மேலானவனோ, அக்காரணத்தால், உலகத்திலும் வேதத்திலும், புருஷோத்தமன் என்று புகழ் பெற்றவனாக இருக்கிறேன். -18
பரத குலத்துதித்தவனே! எவன் இவ்வாறு மயக்கமற்றவனாய், ‘புருஷோத்தமன்’ என்று என்னை அறிகின்றானோ, அவன் எல்லாம் அறிந்தவனாய், முழு மனதோடு என்னைப் பூஜிக்கிறான். -19
பாபமற்றவனே! இவ்வாறு பரம இரகசியமான இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப்பட்டது. பாரதா! இதை அறிந்தவன் ஞானியாகவும், செய்ய வேண்டியதை செய்தவனும் ஆகிறான். -20
ஹரி ஓம்.
முதலாம் பரிசு: கார்
இரண்டாம் பரிசு : EV ஸ்கூட்டர்
மூன்றாம் பரிசு : EV சைக்கிள்
சின்மயா தமிழ் பகவத் கீதை பாராயணப் போட்டி 2025 | புருஷோத்தம யோகம் 15-ம் அத்யாயம் | போட்டி பாடல்
நமது நோக்கம் :
நம் பாரத பாராம்பரியத்தின்படி, நமது குழந்தைகளின் வாழ்வை செம்மைப்படுத்துவது.
குழந்தைகள் பாத்திரமல்ல. நிரப்புவதற்கு!
அவர்கள் ஒளிவிளக்குகள்! ஏற்றப்பட வேண்டியவர்கள்!
குழந்தைகள் நாளைய உலகின் சிற்பிகள்!
அவர்கள் தேசத்தையும் மனித நேயத்தையும் உருவாக்குபவர்கள்!
ஸ்வாமி சின்மயானந்தர்
15-ம் அத்யாயம் “புருஷோத்தம யோகம்”
வழிகாட்டல் :
தகுதி : (I) – மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை (8 முதல் II வயது வரை) 1 முதல் 3 ஸ்லோகங்கள் மற்றும் ஏதேனும் ஒரு ஸ்லோகத்திற்கு விளக்கம் தரவேண்டும். (3 நிமிடங்களுக்குள் இருக்கவேண்டும்.)
(2) – ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை (12 முதல் 14 வயது வரை)
1 முதல் 5 ஸ்லோகங்கள் மற்றும் ஏதேனும் ஒரு ஸ்லோகத்திற்கு விளக்கம் தரவேண்டும். (4 நிமிடங்களுக்குள் இருக்கவேண்டும்.)
முதல் சுற்று : கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் கைப்பேசியில் வீடியோ மற்றும் ஆடியோவில் பதிவு செய்து டிசம்பர் 1 முதல் 10 தேதிக்குள் தரப்பட்டிருக்கின்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
இரண்டாம் சுற்று : ஜனவரி 11, மற்றும் 25-ம் தேதியில் நேரடி தேர்வு நடைபெறும்.
இறுதி சுற்று: பிப்ரவரி 8-ம் தேதி நேரடியாக நடைபெறும்.
நேரடி தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
சின்மயா தமிழ் பகவத் கீதை பாராயணப் போட்டி 2025 | புருஷோத்தம யோகம் 15-ம் அத்யாயம் | போட்டி பாடல்