உலக வரலாற்றிலேயே 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அபூர்வமான தலைவர் – வ.உ.சிதம்பரம் பிள்ளை
உலகளவில் 40 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே அரசியல் தலைவராக வ.உ.சிதம்பரம் பிள்ளை விளங்குகிறார். அதிலும், கோவை சிறை அவரின் மனதிலும் உடலிலும் ஆழமான வேதனையை ஏற்படுத்திய இடமாக அமைந்தது.
அந்த சிறையில் பணியாற்றிய ஜெயிலர் மிஞ்ஜேல் என்பவர் கொடூர மனப்பான்மை கொண்டவன். மனிதாபிமானமற்ற அவனது செயற்பாடுகள் வஉசியின் வாழ்க்கையை நரகமாக மாற்றின.
சிறைக்குள் அழைத்துச் செல்லும் போதே, வஉசியின் கை கால்களை கட்டி, பொதுமக்கள் முன்னிலையில் தெருவெங்கும் இழுத்துச் சென்றனர். சிறைக்குள் அவருக்கென தனி அறை வழங்கப்பட்டிருந்தாலும், அதில் காற்றோட்டமோ, சுத்தமோ இல்லை. கால்களில் விலங்கு சங்கிலி பூட்டப்பட்ட நிலையிலேயே அவர் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டதும் வஉசியின் தலையை முழுவதும் மொட்டை அடித்தனர். அணிய ஒரே ஒரு ஆடையே கொடுத்தனர்; அது கூட சாக்குப் பையால் தைத்த உடை. ஆயிரக்கணக்கானோருக்கு உணவு வழங்கிய அந்த மனிதருக்கு, சிறையில் புளித்த கூழே உணவாக வழங்கப்பட்டது. சில நேரங்களில் அந்த கூழில் புழுக்கள் மிதந்ததாகவும் கூறப்படுகிறது.
உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஒருநாள் மட்டும் சாதம் வழங்குமாறு வஉசி கேட்டபோது, அதற்குப் பதிலாக மூன்று நாட்கள் உணவே வழங்காமல் பட்டினி வைத்தான் அந்த ஜெயிலர்.
சணல் கிழிக்கும் இயந்திரத்தை கைகளால் சுற்றும் வேலை வஉசிக்கு முதலில் வழங்கப்பட்டது. இதனால் அவரது கைகளில் தோல் கிழிந்து ரத்தம் வழிந்தது. அந்தக் காட்சியை பார்த்த ஒரு கைதி மனம் தளர்ந்து, ஓடி வந்து இயந்திரத்தை நிறுத்த முயன்றார். இதற்காக அந்த கைதியை மிஞ்ஜேல் கடுமையாக தாக்கினான்.
பின்னர், கையால் செய்யும் வேலையை நிறுத்தி, மாட்டுக்கு பதிலாக வஉசியை செக்கிழுக்கும் பணியில் ஈடுபடுத்தினர். கொளுத்தும் வெயிலில் செக்கிழுக்கும் போது மயங்கி விழுந்தால், சவுக்கால் அடிப்பதே பதிலாக இருந்தது.
வஉசியின் பெருமையை உணர்ந்த ஒரு கைதி, இரு கைகளையும் உயர்த்தி “வணக்கம் ஐயா” என மரியாதை செய்தார். அதற்காகவே சிறையில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி, துப்பாக்கிச்சூட்டில் ஒரு கைதி உயிரிழக்கும் அளவுக்கு அந்த ஜெயிலர் நிலைமையை மோசமாக்கினான்.
விடுதலைக்குப் பிறகும் வஉசி தனது வழக்கறிஞர் பணியை தொடர முடியாதபடி அவரது உரிமம் பறிக்கப்பட்டது. பின்னர் ஒரு அரிசிக் கடையில் வேலை செய்து, நாள் முழுவதும் உழைத்து நான்கு ஆழாக்கு அரிசியுடன் வீடு திரும்பியுள்ளார். இதை அறிந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், அந்த கடையையே சீல் வைத்தனர்.
அரை வயிற்றுக் கஞ்சிக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டதால், தலைக்கு மண்ணெண்ணெய் சுமந்து வீடு வீடாக விற்ற காலமும் வஉசிக்கு உண்டு.
இதிலும் கொடுமையானது, தனது வழக்கறிஞர் உரிமத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வாதாட உதவுமாறு வஉசி கேட்டபோது, மூத்த வழக்கறிஞர் ராஜாஜி மறுத்ததாக கூறப்படுகிறது.
சில நேரங்களில் காந்தியின் நிலைப்பாடுகளை முழுமையாக ஏற்க முடியாமலும், சில சமயம் அவரை விட்டுத் தர மறுத்தும் வஉசி செயல்பட்டுள்ளார்.
வஉசி குடும்பம் வறுமையில் வாடுவதை அறிந்த தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள், 5,000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் ஒப்படைத்து, “இந்த தொகை வஉசியிடம் சேர வேண்டும்” என பலமுறை கடிதம் மூலம் நினைவூட்டினர். ஆனால் அந்த பணம் வஉசியிடம் சேர்க்கப்படவில்லை. இதைத்தான் மக்கள் “காந்தி கணக்கு” என விமர்சித்தனர். (பின்னர் திலகர் தலையிட்டு அந்த தொகையை வஉசிக்கு கிடைக்கச் செய்தது தனிக்கதை)
உண்மையில், பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையால் ஏற்பட்ட பாதிப்பை விட, சொந்த இயக்கத்தினரின் அலட்சியமும் துரோகமும் வஉசியை அதிகம் சிதைத்தது.
பல ஆண்டுகள் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையருக்கு எதிராக, இந்தியாவில் முதல் முறையாக கப்பல் இயக்கிய பெருமை தமிழரான வஉசிக்கே உரியது.
இந்த நாட்டின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருக்க வேண்டிய மனிதர் வஉசி.
1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சி புறக்கணிக்கப்பட்டதும், 1857-ஆம் ஆண்டு சிப்பாய் கிளர்ச்சி பெரிதுபடுத்தப்பட்டதும் ஏன்?
ஒரு விஷயம் மட்டும் தெளிவாகிறது – எவ்வளவு பெரிய தியாகமாக இருந்தாலும், அதை மதிப்பிடுவது இந்திய அரசியலில் “சாதி” என்ற அளவுகோலே.
இனிமேல் “வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்” என்ற ஒரு வரியோடு அவரை சுருக்கிவிடாமல், அவரது சமூக நீதி சிந்தனைகளை இன்றைய இளைஞர்களிடம் வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழர்களை இழிவுபடுத்தவும், குறைத்து மதிப்பிடவும் யாருக்கும் உரிமை இல்லை என்பதை உறுதியாகப் பதிவு செய்ய வேண்டும்.
இந்திய சுதந்திரத்திற்காக தன் வாழ்க்கையையும் உயிரையும் அர்ப்பணித்த தியாகிகளை நன்றியுடன் நினைவுகூர்வோம்.