Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ராம அவதாரம் – இறுதி பகுதி 10

இராமாயணம் – ராம அவதாரம் பகுதி 10 – ராம பட்டாபிஷேகம் மற்றும் வைகுண்டப் பிரவேசம் (இறுதி பகுதி) இலங்கை யுத்தம் முடிந்து, இராவணன் வீழ்ந்தபின் அந்த மண்ணில் ஒரு புதிய அமைதி பிறந்தது. பல ஆண்டுகளாக...
HomeHistoryராம அவதாரம் - பகுதி 1

ராம அவதாரம் – பகுதி 1

இராமாயணம் – ராம அவதாரம்

பகுதி 1 – ஜய விஜயர்களின் சாபமும் ராம அவதாரத்தின் காரணமும்

வைகுண்டத்தின் பரமபத வாசலில் நின்று நாராயணனின் திருவுளத்தை காக்கும் காவலர்களாக ஜயன், விஜயன் என்ற இருவர் விளங்கினர். அவர்கள் பகவானின் பரம பக்தர்களாக இருந்தாலும், தங்கள் பதவியின் பெருமையால் சிறிது அகந்தை கொண்டிருந்தனர். ஒருநாள் பிரம்மாவின் மனசுபுத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் மகாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் வந்தனர். குழந்தைகளைப் போலத் தோற்றமளித்த அந்த முனிவர்களை ஜய விஜயர்கள் சாதாரண சிறுவர்கள் என எண்ணி உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபமுற்ற சனகாதியர்கள், “பெருமாளின் அருகில் இருந்தும் அகந்தை கொண்டிருப்பதால், நீங்கள் பூலோகத்தில் அரக்கர்களாகப் பிறந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டும்” என்று சாபமிட்டனர்.

அந்த சாபத்தை அறிந்த ஜய விஜயர்கள் நடுங்கினர். அவர்கள் உடனே திருமாலிடம் சரண் அடைந்தனர். கருணைமிகு நாராயணன், “இந்த சாபம் என் திருவிளையாடலின் ஒரு பகுதி. நீங்கள் மூன்று பிறவிகளில் என் பகைவர்களாகப் பிறந்து, என் கரத்தால் வதைக்கப்பட்டு மீண்டும் வைகுண்டம் திரும்புவீர்கள்” என்று அருளினார். முதல் பிறவியில் அவர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபு எனப் பிறந்தனர். அப்போது பகவான் வராக அவதாரமாகவும் நரசிம்ம அவதாரமாகவும் தோன்றி அவர்களை அழித்தார். இரண்டாவது பிறவியில் அவர்கள் இராவணன், கும்பகர்ணன் ஆகியோராய் தோன்றினர். அவர்களை அழிக்கவே ராம அவதாரம் நிகழ்ந்தது. மூன்றாவது பிறவியில் சிசுபாலன், தந்தவக்கிரன் ஆகியோராய் தோன்றி கிருஷ்ணரால் வதைக்கப்பட்டு மீண்டும் வைகுண்டம் சேர்ந்தனர்.

அந்நேரத்தில் பூமி முழுவதும் அரக்கர்களின் கொடுமை அதிகரித்திருந்தது. இலங்கையை ஆண்ட இராவணன் மிகுந்த தவபலத்தால் அசாதாரண வலிமை பெற்றிருந்தான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். யாகங்கள் நடைபெறாமல் தடங்கல் செய்தான். தர்மம் அழிந்து அதர்மம் வளர்ந்தது. தேவர்கள் அனைவரும் பிரம்மனை அணைந்து துன்பத்தை எடுத்துரைத்தனர். பிரம்மா அவர்களை அழைத்துக் கொண்டு திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவை துதித்தார். அப்போது பரமன், “நான் பூலோகத்தில் மனிதராக அவதரித்து இராவணனை அழிப்பேன்” என்று உறுதி அளித்தார்.

அயோத்தி நகரத்தை சூரிய குலத்தில் பிறந்த தசரத சக்கரவர்த்தி ஆட்சி செய்தார். அவர் வீரத்திலும், தர்மத்திலும் சிறந்தவராயிருந்தார். ஆனால் அவருக்கு மகப்பேறு இல்லை என்பது பெரிய கவலையாக இருந்தது. கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர் இருந்தும், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தசரதன் மனவேதனையில் மூழ்கினார். அரசவையில் முனிவர்களுடன் ஆலோசித்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய முடிவு செய்தார்.

மகா முனிவரான ரிஷ்யச்ருங்கரை அழைத்து வந்து யாகம் நடத்தினார். யாகம் நிறைவடைந்தபோது அக்னி தேவன் தங்கப் பாத்திரத்தில் அமுதப்பாயசம் கொண்டு வந்து தசரதனிடம் கொடுத்தார். “இதை உங்கள் மனைவியருக்கு வழங்குங்கள்; உங்களுக்கு பரம பாக்கியசாலிகளான புதல்வர்கள் பிறப்பார்கள்” என்றார். தசரதன் அந்தப் பாயசத்தை கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோருக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

காலம் சென்றது. அயோத்தி நகரம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. கோசலைக்கு ஸ்ரீராமர் பிறந்தார். கைகேயிக்கு பரதன் பிறந்தார். சுமித்திரைக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்னன் பிறந்தனர். தேவர்கள் தங்கள் அம்சங்களால் வானரர்களாக பூமியில் பிறந்தனர். ஏனெனில் எதிர்காலத்தில் ராமனுக்கு உதவ வேண்டும் என்பதே அவர்களின் கடமை.

ராமர் பிறந்த நாளில் அயோத்தி நகரம் திருவிழாவாக காட்சியளித்தது. வீதிகள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டன. வேதகோஷம் முழங்கியது. மக்கள் அனைவரும் “தர்மம் பிறந்த நாள் இது” என்று மகிழ்ந்தனர். சிறு வயதிலிருந்தே ராமர் அமைதி, அன்பு, கருணை, வீரியம், பணிவு ஆகிய அனைத்திலும் சிறந்தவராக விளங்கினார். லட்சுமணன் எப்போதும் ராமரையே பின்தொடர்ந்தான். பரதன் சத்ருக்னனுடன் அன்பு கொண்டிருந்தான்.

குருவாகிய வசிஷ்டர் இளவரசர்களுக்கு வேதம், வில் வித்தை, அரசியல், தர்ம சாஸ்திரம் ஆகிய அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். கல்வியிலும், போர்திறமையிலும், ஒழுக்கத்திலும் ராமர் அனைவரையும் மிஞ்சினார். மக்கள் அவரை அன்புடன் பார்த்தனர். “இவரே எதிர்காலத்தில் உலகை தர்மத்தால் காப்பாற்றப்போகிறார்” என்று முனிவர்கள் கூறினர்.

ஒருநாள் விசுவாமித்திர முனிவர் அயோத்திக்கு வந்தார். அவர் நடத்த இருந்த யாகத்தை அரக்கர்கள் கெடுத்து வந்தனர். அதனை காக்க ராமனையும் லட்சுமணனையும் தமக்கொப்பாக அனுப்புமாறு தசரதரிடம் கேட்டார். தசரதன் முதலில் கலங்கினார். “இளம் வயதிலுள்ள என் மகன் எப்படி கொடிய அரக்கர்களை எதிர்ப்பான்?” என்று பயந்தார். ஆனால் வசிஷ்டர், “இவர் சாதாரண மனிதன் அல்ல; பரமாத்மாவின் அவதாரம்” என்று கூறியபின் தசரதன் சம்மதித்தார்.

இவ்வாறு உலக தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக ராம அவதாரத்தின் மாபெரும் பயணம் தொடங்கியது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here